No icon

செப்டம்பர் 21

  உலக அமைதி தினம்

 இவ்வுலகில் அமைதியை விரும்பாதோர் இல்லை எனலாம். பிரச்சனைகள் இல்லாத அமைதியான வாழ்வே, ஒவ்வொரு மனிதனின் அடிப்படை ஆசை என எவ்வித அச்சமுமின்றி உறுதிபட கூறலாம். இந்த அமைதியை இரண்டு கூறுகளாகப் பிரிக்கலாம், புற அமைதி மற்றும் அக அமைதி. அக அமைதியும், புற அமைதியும் ஒன்றோடு ஒன்று ஆழமாய் பின்னிப் பிணைந்தவைகளே! அக அமைதியே சாத்தியமற்று இருக்கும் இன்றைய காலச் சூழலில் புற அமைதி சாத்தியமாவது அரிது. புற அமைதியற்ற சூழலிலும் அக அமைதியை மனிதன் அடைவது நிச்சயம் சாத்தியமே. அதைச் சாத்தியமாக்குவது எங்ஙனம் என இங்கு அறிந்துகொள்ள முயற்சிப்போம்.

தொன்று தொட்டு மனித இனத்தின் புற அமைதிக்கு சவாலாக அமைவது போர்களே! ஆதிகாலத்தில் காட்டு விலங்குகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள மனிதன் போராட வேண்டியிருந்தது. பின்பு தன் நாட்டை பிறரிடமிருந்து பாதுகாக்க மனிதன் போரை தன் ஆயுதமாக்கினான். பின்பு தனது வலிமையை உலகுக்கு எடுத்துரைக்க போரிட்டான். ஆனால், இன்று பழிவாங்கவும், ஆட்சியாளர்களின் சுயநலனுக்காகவும் போரிடத் துவங்கிவிட்டான். அந்த வரிசையில் மனிதனைப் பக்குவப்படுத்த வேண்டிய மதங்களும் அதன் கொள்கைகளும், அடிப்படை வாதங்களாக கட்டமைக்கப்பட்டு பிறரின் நலவாழ்வுக்கும், உலகின் அமைதிக்கும் அச்சுறுத்தலாக அமைகின்றன. இந்த பின்புலத்தில் உலகளாவிய புற அமைதி சாத்தியமற்ற ஒன்றாகவே பிம்பமளிக்கிறது.

நாடுகளும் ஆட்சியாளர்களும் இவ்வாறிருக்க, தனி மனிதனும் இந்த அமைதிக்கு எதிரான போரில் தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்கி, தனி மனிதனின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கின்றான். அதில் நாமும் விதி விலக்கல்ல. சரி, தனிமனித அமைதிக்கு அப்படி எந்த விதத்தில் நாம் காரணமாகிவிட்டோம்? பின்வரும் நிகழ்வின் மூலம் அதை புரிந்துகொள்ள நாம் முயற்சிப்போம். ஒரு இளம் பெண்ணும், இளைஞனும் நல் நட்புறவோடு பழகி வந்தனர். ஒருநாள் மற்றொரு இளைஞன் அந்த இளம் பெண்ணிடம், அந்த இளைஞனைச் சுட்டிக் காட்டி உன் ஆள் எப்படி இருக்கின்றான், என வினவ அவ்வளவுதான் அந்தநாள் அவ்விருவரின் நட்பின் இறுதி நாளாக அமைந்தது. அந்த இளைஞன் எவ்வளவு முயன்றும் அந்த நட்பு மீண்டும் சாத்தியமாகவில்லை.

நம் வாழ்விலும் இப்படிதான், ஆழம் தெரியாமல் நாம் சொல்லும் பல வார்த்தைகள் பிறரின் வாழ்வில் ஆழமான எதிர்மறைத் தாக்கத்தை உருவாக்கிவிடுகின்றன. விளையாட்டாகவும், கேலியாகவும் நாம் செய்யும் செயல்களும், சொல்லும், வார்த்தைகளும் பிறரின் வாழ்வில் ஆழமான எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வில் நிரந்தரமாக அமைதியைக் குழைத்துவிடுகின்றன. இவ்வாறு ஏதோ ஒருவகையில்  நம்  அமைதி குழைந்து விடுவது இயல்பாகி விடுகிறது. இந்த சவால்களுக்கு மத்தியிலும் அமைதியை சுவைப்பது எவ்வாறு?

தன்னையறிதல் என்னும் ஒற்றை வாக்கியம் தான் இயேசு, புத்தர் உள்ளிட்ட பெரும் மகான்களை இந்த அமைதியற்ற உலகில் ஆழ்ந்த அமைதியோடு வாழ உறுதுணைப் புரிந்தது. ஒருவன் தன்னை அறியும் போது பிறர் கூறும் எதுவும், வெளியிலிருந்து வரும் எவையும் அவனைப் பாதிப்பதில்லை. நதியில் ஓடும் நீர்போல அவன் எதிர்வரும் சவால்களை கடந்து சென்றுகொண்டே இருக்கின்றான். ஒருவர் தன்னை அறியாதபோது, பிறர் கூறும் சிற்சில காரியங்களும் மேற்கண்ட நிகழ்வைப் போல நம்மில் ஆழமான தாக்கத்தை விட்டுசெல்லும். தன்னை அறிபவர் எவரும் தன்னைப் பற்றிய அறிவின் அடிப்படையில் பிறரையும் அறிய முற்படுகின்றார். எனவே, பிறரைத் தீர்ப்பிடும் நீதிபதியாய் இல்லாமல், புரிந்துகொள்ளும் நல் மனிதனாக மாறுகின்றார். அதன் வழி தான் மட்டும் அமைதியாய் வாழ்வதோடன்றி, பிறரும் உள்மன அமைதியை சுவைக்கக் காரணமாகின்றார். சரி, ஒருவன் எவ்வாறு தன்னைஅறிவது?

பொதுவாக ஆழ்ந்த அனுபவமும், முதிர்ந்த வயதும் நம்மை ஞானம் நிறைந்தவர்களாக, உருவாக்குகிறது என்பர். தான் கடந்து வரும் அனுபவங்கள் தன்னை பாதிக்க அனுமதிக்கும் போதும், அந்த அனுபவங்களை ஆய்ந்து பாடம் கற்கும் போதும் ஒரு மனிதன் தன்னை அறிகிறான், ஞானியாகிறான். தன்னையறிந்த எவன் ஒருவனும், வாழ்வின் இரைச்சல் நிறைந்த சூழலிலும் அமைதியை உணரமுடிகிறது. பிறரையும் அந்த அமைதிக்கு இட்டுச் செல்லமுடிகிறது.

உலக அமைதி தினத்தைக் கொண்டாடுகின்ற இந்த தருணத்தில் நமது முதிர்ச்சியற்ற செயல்களாலும், முறையற்ற பேச்சாலும் பிறரின்  உள்மன அமைதியை குலைப்பதை நிறுத்தி, நம் வாழ்வில் கிடைக்கும் அனுபவங்களை நமக்கான ஞானமாய் மாற்றிட நம்மையே நாம் அறிந்து ஞானிகளாய் திகழ்ந்திட நாம் தயாரா?

Comment